"சிறு விவசாயிகள் கொத்தமல்லி பயிரிட்டு லாபம் பெறலாம்''

சிறு, குறு விவசாயிகள் நறுமண கொத்தமல்லி பயிரிட்டு அதிக லாபம் பெறலாம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வேளாண்மைத் துறை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவில் நறுமண பயிர்களில் கொத்தமல்லி முக்கியமானதாகும். கடந்த 2015 -16-ஆம் ஆண்டில் 5.85 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கொத்தமல்லி பயிரிடப்பட்டு 4.91 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த கொத்தமல்லி உற்பத்தியில் 3-இல் 2 பங்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு, குஜராத், ஆந்திரம், கர்நாடகம், ஒடிஸô ஆகிய மாநிலங்களிலும் கொத்தமல்லி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் குளிர்காலப் பயிராக நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொத்தமல்லி விதைக்கப்டுகிறது.  தை மாதத்திலும் அதிகமாக பயிரிடப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு கொத்தமல்லி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் கொத்தமல்லியில் 50 சதவீதம் நறுமணம் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

தமிழகத்தில் மார்ச், மே மாதங்கள் கொத்தமல்லி அறுவடை காலம் என்பதால் அந்தப் பருவத்தில் சந்தைகளில் வரத்து அதிகரித்து காணப்படும். வர்த்தக மூலங்களின்படி ராஜஸ்தானில் வரும் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொத்தமல்லி வரத்து வெகுவாகக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொத்தமல்லி தரம் குறைந்து காணப்பட்டாலும் விலை குறைவாக இருப்பதால் அதிக வர்த்தகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் மற்ற மாநிலங்களில் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் கொத்தமல்லி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கொத்தமல்லிக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சாகுபடியாகும் கொத்தமல்லிக்கு குவிண்டாலுக்கு ரூ.8,500 கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்து நல்ல லாபம் பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter